உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு பல வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. பின்னர், அயோத்தி வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது.
40-வது மற்றும் இறுதி நாளான இன்று கூடிய அமர்வில் முதலில் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், `இந்த வழக்கு விசாரணை இன்று
மாலை ஐந்து மணியுடன் நிறைவடைகிறது. இதில் நாங்கள் போதுமான அளவு விசாரணை நடத்திவிட்டோம். இறுதி நாளாக இன்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.
பின்னர், அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களைத் தொடங்கினர். அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது முதல் உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இறுதி விவாதம் என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவு கோபங்களும், விவாதங்களும் மிகவும் அதிகமாகவே இருந்தன.
இந்து அமைப்பினர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிஷோர் குணால் எழுதிய `அயோத்தியா மீள்பார்வை' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளை மேற்கோள் காட்டி பேசிக்கொண்டிருந்தார். முன்னதாக அயோத்தியிலிருந்த ராமர் கோயில் வரைபடங்களையும் அந்தப் புத்தகத்தையும் நீதிபதிகளின் முன்பும் எதிர் தரப்பினரிடமும் சமர்ப்பித்தார்.