வருமான இழப்பு! - ஆள்குறைப்பில் இறங்கும் `உபர்' இந்தியா

உலகளாவிய அளவில் வர்த்தக இழப்பு ஏற்பட்டதால், பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் உபர் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் இயங்கும் உபர் பணியாளர்களில் 10 - 15% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.


உபர் இந்தியா நிறுவனம், வாகனச் சேவையை மட்டும் வழங்காமல், 'உபர் ஈட்ஸ்' என்ற பெயரில் உணவு வழங்கல் சேவையையும் செய்துவருகிறது. உபர் இந்தியா நிறுவனத்திற்கு, இந்தியாவில் 350 - 400 பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், உலகளாவிய அளவில் அந்த நிறுவனத்திலிருந்து 350 பேர் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கை மூன்றாவது முறையாகத் தொடர்கிறது. இவர்களில் 70 சதவிகிதம் பேர், அமெரிக்கா மற்றும் கனடாவில் பணியாற்றுகிறார்கள்.


இந்தியாவில், உபரின் வர்த்தகக் கொள்கையைத் தீர்மானிக்கும் குழுவின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணிகள், அவுட்சோர்ஸிங் முறையில் செய்யப்படுவதாகத் தெரிகிறது. உபர் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 2% மட்டுமே இந்தியாவிலிருந்து கிடைக் கிறது. இந்தியாவில் செலவு அதிகமாவதால், இத்தகைய ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.